எந்த ஒரு தொழிலிலுமே எடுத்த எடுப்பில் லாபம் பிய்த்துக்கொண்டு கொட்டுவதில்லை. வெளியில் இருந்து பார்த்தால் எல்லா தொழில்களும் லாபம் கொழிக்கும் வாய்ப்பாகவே தெரியும். இறங்கி வேலை செய்யும்போது, சில நடைமுறைச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அது, தொழிலுக்கான ஆரம்பகட்ட வேலைகளில் இருந்தே தொடங்குகிறது.
அஸ்திவாரம் எடுக்கும்போது வெறும் மண் குவியல்களாகத்தான் தெரியும். கட்டி முடித்தபிறகு அதன் அழகுணர்ச்சியும், வெளிப்புற வடிவங்களும் மனதை ரம்மியமாக்கும். அதைப்போலத்தான் ஆரம்பகட்ட வேலைகளும். உருவத்தைத் தருவதற்கு ஆகும் நேரங்கள், வருமானமில்லா செலவுகள் என முக்கியமான சில அஸ்திவாரப் பணிகளைச் சரியாகத் திட்டமிட்டுவிட்டால் அதன்பின் தொழில் ஜொலிக்கத் துவங்கிவிடும். அஸ்திவாரத் திட்டமிடுதல்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
எந்தத் தொழிலை ஆரம்பிக்க உள்ளோமோ, அவற்றுக்கான தியரி கிளாஸ்தான் இப்போது நாம் பார்க்கப் போவது! ஏதேனும் ஒரு வழியில் உங்களுக்குப் பரிச்சயம் உள்ள தொழிலைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்கள். இதில்தான் ஆரம்பிக்கப் போகிறேன் என முடிவெடுத்த பிறகு செய்யவேண்டிய முதல் வேலை, அதைப்பற்றிய முழுத் தகவல்களையும் சர்வே செய்வது!
உதாரணமாக, விதவிதமான துணிகளை வைத்து விற்கும் ரெடிமேட் கார்மென்ட் ஷாப் துவங்கப் போவதாகக் கொள்வோம். ‘அந்தத் தொழில் எத்தனை சதவிகிதம் வருமானத்தைத் தரும்... அதற்கான வாய்ப்புகள் என்ன... வாடிக்கையாளர்கள் யார்... சுற்றுப்புறத்தில் இதுபோன்ற கடைகள் எங்கெங்கு உள்ளன... போட்டி யாளரின் விலை விவரங் கள்... தன் வாடிக்கை யாளர்களுக்கு கடை பற்றிய அறிமுகத்தை எப்படித் தருவது?’ என்று தெளிவான ஒரு பார்வை இருக்கவேண்டும்.
தொடங்கும் தொழில் மற்றும் அத்துறை சார்ந்த விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். இப்போதைய வாய்ப்புகள் எதிர் காலத்தில் எந்த மாதிரி யான மாற்றங்களுக்கு ஆளாகும்..? என்பதை எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
தொழில் ஆரம்பிக்கும் பகுதியின் பூகோள அமைப்பு, அங்குள்ள மக்களின் வாங்கும் சக்தி என்ன... அவர்களின் சராசரி வருவாய் விகிதம் என்னவாக இருக்கிறது... வாடிக்கையாளர்களின் டேஸ்ட் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிப்பது, தொழிலைத் திட்டமிட பயன்படும்.
அந்தத் தொழிலுக்கே உரிய சட்டப்படியான நடைமுறைகளை அறிந்து, அதற்கேற்ற இடமாக இருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும். ஒரு டிராவல்ஸ் ஆரம்பிப்பதாக இருந்தால், கார்களின் பர்மிட்டைப் பொறுத்தவரை ‘ஆல் இண்டியா பர்மிட்’, ‘ஸ்டேட் பர்மிட்’ என இருவகை உள்ளது. ஆல் இண்டியா பர்மிட் உள்ள வண்டிகளுக்கு பத்துவருடம் வரைதான் லைசென்ஸ். வருடம் முடிந்தவுடன் தானாகவே லைசென்ஸ் கேன்சலாகிவிடும். அதன்பிறகு சொந்த உபயோகத்துக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். இந்த விவரங்களோடு இன்ஷூரன்ஸ், வருடத்துக்கான வரி எவ்வளவு, வெளிமாநிலங்களுக்குச் சென்றால் டேக்ஸ் என்ன என்பது முதற்கொண்டு தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
கடை என்றால் தேவையான இன்டீரியர் வேலைகளுக்கான செலவுகள், கால அவகாசம் இவற்றையும் கணக்கிடவேண்டும். வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்வதாக இருந்தால், ஆகும் இடைக்காலச் செலவுகள், நல்ல திறமையான ஊழியர்களைப் பணி அமர்த்துவது என குறைந்தபட்சம் ஒரு மாத காலம் ஆகும்.
அலுவலகம் என்றால் தேட ஆரம்பிக்கும்போதே தொழிலுக்கு பெயர் வைப்பது, சரக்குகளை வாங்குவது, எந்தப் பொருளை எங்கே வைத்தால் பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் என்ற விஷயங்களில் தெளிவு பெற்றுக்கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் ஏரியா ஒதுக்கமுடியுமா என்பதைக் கவனிக்கவேண்டும். தொலைபேசி இணைப்பை இந்தக் காலகட்டத்திலேயே வாங்கிவிடவேண்டும்.
அடுத்தபடியாக விசிட்டிங் கார்ட்! கடை துவங்கும் வேலை ஆரம்பித்த நாளிலிருந்தே தெரிந்தவர், வருவோர் போவோர் எல்லோருக்கும் இப்படி ஒரு வேலை நடந்துகொண்டு இருக்கிறது. இந்தத் தேதியில் கடை திறப்புவிழா என்று விளம்பரப்படுத்த ஆரம்பியுங்கள். இதுதான் உங்களது விளம்பர உத்தியில் பிரம்மாஸ்திரம். கடைச்சரக்கு பற்றிய விவரங்கள் அடங்கிய பட்டியலை பிட் நோட்டீஸாகக் கொடுத்து விளம்பரம் செய்யவேண்டும்.
இவை அனைத்துக்கும் தொழில் ஆரம்பிக்கும் முன்னரே செலவு செய்யவேண்டியிருக்கும். இதற்கெல்லாம் கையில் பணம் இருக்கவேண்டும். கடன் வாங்குதல் கூடாது.
எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை உருவாக்கி நல்ல நட்புறவை வளர்த்துக்கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு வருமானத்துக்கான வழிகள் அரண்மனைக் கதவுகள் போலப் பெரிதாகத் திறக்கும்.
தொழில் பற்றிய விவரங்களை வைத்துக் கொண்டு, திட்ட அறிக்கையினைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதாவது, இந்தத் தொழில் ஆரம்பித்தால் எவ்வளவு முதலீடு தேவைப்படும். செய்த முதலீட்டை எத்தனை மாதங்களில் எடுக்கமுடியும். மாதம் எவ்வளவு சம்பாதிக்கமுடியும்... நடைமுறை மூலதனம் போன்ற விவரங்கள் அடங்கியதே அது. இத்துடன் இதற்கான காலம் எவ்வளவு ஆகும் என்பதையும் கணக்கிடவேண்டும். அதில் முதலீட்டின் வட்டிவிகிதம் அடங்கும்.
திட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு பட்ஜெட் போடவேண்டும். அதில் ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டும், சிக்கனமாகவும் பில்வாங்கியும் கணக்கு எழுதிவைக்கவேண்டும்..
இந்தக் காலத்தில் உங்களது சொந்த வேலைகள் பாதிக்கப்படும். வருமானம் இல்லாமல் செலவுகள் ஆகும். போக்குவரத்துச் செலவுகள், புரோக்கர் கமிஷன்கள், தேடுவது கிடைக்கும்வரை ஆகும் விரயங்கள் என இதுவே ஒரு பெரும்தொகையாக இருக்கும். இதனைச் சமாளிக்கவும் பணம் கையிருப்பு இருக்க வேண்டும். இவற்றை முதலீட்டில் சேர்த்துக் கணக்கிடுவதா அல்லது செலவுகளாகச் சேர்த்துவிட்டு லாபத்தைக் குறைத்துக்கொள்வதா என்ற விவரமும் தெரிந்திருக்கவேண்டும். பொதுவாக, ஒரு திட்டம் துவங்கும் முன் ஆகும் செலவினங்களை முதலீடாகவே எடுத்துக்கொள்வார்கள்.
எல்லா தொழில்களும் லாபம் தரக்கூடியதே! அது தரும் லாப சதவிகிதத்தில்தான் மாறும். முதலீடு செய்து தங்க முட்டையை எடுப்பதும், தவிட்டு முட்டையைப் பெறுவதும் நம் கையில்தான் இருக்கிறது
No comments:
Post a Comment